தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது இடத்தில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவிடக்கூடாது? - கோர்ட் எழுப்பும் கேள்வி - PARTY FLAG TREES REMOVE

பொது இடத்தில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தமிழக காவல்துறையிடம் உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 5:40 PM IST

மதுரை: பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், கொடி மரங்களால் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளது என்பதை அறிக்கையாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், '' நான், எனது மனைவி ஆகியோர் அதிமுக கட்சியில் உள்ளோம். எனது மனைவி நாகஜோதி அதிமுக சார்பில் மாநகராட்சி வார்டு எண் 20ல் போட்டியிட்டு மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி செய்து வருகிறார்.

அதிமுகவின் 53 ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்கள் பகுதியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கொடி கம்பம் வைப்பதற்கு மாநகராட்சி ஆணையருக்கு மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி ஆணையரை நேரில் அணுகி அனுமதி கேட்ட பொழுது பட்டா இடங்களில் மட்டுமே கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்க முடியும் என தெரிவித்துவிட்டனர்.

இதையும் படிங்க:மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழக மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஆனால், நான் அனுமதி கேட்கும் இடத்திற்கு அருகிலேயே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது. அதற்கு எந்த அனுமதியும் கிடையாது. இந்த கொடிக்கம்பத்தால் பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என்பதை உறுதிமொழி கொடுத்தும் தொடர்ந்து அதிமுக கொடி கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இது பாரபட்சமான செயலாகும். எனவே, அதிமுக கொடி கம்பம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக தமிழக காவல்துறை டிஜிபி-யை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் கொடி மரங்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளது? இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

ABOUT THE AUTHOR

...view details