மதுரை: தென்காசி மாவட்டம் கே.வி.நல்லூர் காவல் நிலையத்தில் தற்போது காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் எம்.சோமசுந்தரம். இவர் கடந்த 1999ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த போது, ஒரு குற்ற வழக்கு தொடர்பாக முத்து, மரியதாஸ் மற்றும் வின்சென்ட் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வின்சென்ட், 18.9.1999 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவி கிருஷ்ணம்மாள், தூத்துக்குடி கோட்டாட்சியரிடம், எனது கணவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக புகார் மனு அளித்தார்.
விசாரணையின் அடிப்படையில் கோட்டாட்சியர், சோமசுந்தரம் உள்பட அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து போலீசாரும் வின்சென்ட் உயிரிழப்புக்கு காரணம் என உறுதிப்படுத்தினார். இது குறித்து கோட்டாட்சியர் தூத்துக்குடி கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது இந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்து, விசாரணைக்கான தேதியை அறிவித்து. இந்த நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடக்குமா என்ற நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கை தூத்துக்குடி அருகே உள்ள வேறு மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, “தாளமுத்து காவல் நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். சுமார் 25 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, இதில் நீதி வழங்கா விட்டால், நீதிமன்றம் மீது அதிருப்தி ஏற்படும்.
இந்த வழக்கில் பயமின்றி என்ன நிலையில் சாட்சிகள் இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. நீதி வழங்குவது மட்டும் நீதிமன்றங்களின் கடமை கிடையாது. அதில் அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்களின் பங்கு மிக முக்கியம். அவர்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நீதி வழங்க முடியும். எனவே, வழக்குரைஞர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியதை நிராகரித்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அந்த நீதிமன்றங்களின் ஆவணங்களை பார்த்தபோது, அது போன்ற கால அவகாசம் எதுவும் கோரவில்லை. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள். இந்த வழக்கை ஜூன் 25ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததில் தவறில்லை.
உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் மனு நிலுவையில் உள்ளதால், அன்றைய தினம் விசாரணை நீதிமன்றத்திற்கு சாட்சிகளாக வந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையை காலதாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை நீதிமன்றத்திற்கு சாட்சிகளாக வந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பிரித்து வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி விசாரணை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞருக்கு உதவியாக சிறப்பு அரசு வழக்குரைஞராக பி.ஆர்.எஸ்.ராமமூர்த்தி நியமிக்கப்படுகிறார். இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் தினமும் விசாரணை மேற்கொண்டு விரைவில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:"புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன"... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!