தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழகர் கோயில் ஊழியர்களுக்கான குடியிருப்பு வழக்கு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு! - AZHAGAR KOVIL STAFF CASE

அழகர் கோயில் வனப்பகுதியில், கோயில் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டுவதற்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி மனுவில், கட்டுமான பணி எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும், இதுகுறித்து வனத்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பழமுதிர்ச்சோலை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
பழமுதிர்ச்சோலை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப்படம் (pazhamudircholai Website)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 7:07 AM IST

மதுரை:மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. இந்த அழகர் மலை அடிவாரத்தில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் உள்ளது. இந்த இரண்டு கோயில்களும் இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அழகர்மலை வனப்பகுதிக்குள் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் உள்ளதால் அதற்கு அருகில் கோயில் பணியாளர்களுக்காகக் குடியிருப்பு கட்டுமானம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தில் அறநிலையத்துறை கட்டடங்களைக் கட்டி வருவது விதிகளுக்கு எதிரானது. வனப்பகுதிக்குள் கட்டுமானங்களுக்கு ஏற்கனவே நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், கட்டுமானப் பணிகள் நடப்பதால் பழமுதிர்ச்சோலைக்கு செல்லும் பாதை, தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. எனவே, விதிகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அழகர் கோயில் நுழைவாயில் கோப்புப்படம் (AZHAGAR KOVIL WEBSITE)

இதையும் படிங்க:அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: இறுதி விசாரணைக்காக ஏப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (பிப்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கட்டுமான பணி எதுவும் மேற்கொள்ளக் கூடாது. தற்போதைய நிலையிலேயே தொடர உத்தரவிட்டு, மனு குறித்து வனத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details