தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும்? நிர்வாக இயக்குநர் வெளியிட்ட தகவல் - MADURAI AIIMS OPENING DATE

மதுரை எய்ம்ஸ் (AIIMS) கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 14.5 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் அனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம்
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 7:33 AM IST

மதுரை:மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே ஒன்றிய அரசின் ‘எய்ம்ஸ்’ (AIIMS) கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதன் நிர்வாக இயக்குநர் அனுமந்த ராவ் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “மதுரை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) கட்டுமானம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இது தமிழ்நாட்டிற்கும், அண்டை மாநில மக்களுக்கும் சிறந்த சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான நம்பிக்கையை அளிக்கும்.

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் பரந்த வளாகத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 2024-ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த கட்டுமானத் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவடையும்.

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்

முதற்கட்டத்தில், கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ/மாணவியர் தங்கும் விடுதிகள், அத்தியாவசிய சேவை கட்டடங்கள் போன்ற முக்கிய வசதிகள் அடங்கியுள்ளன. இந்த முதற்கட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

மதுரை எய்ம்ஸின் நிர்வாக இயக்குநர் அனுமந்த ராவ் (ETV Bharat Tamil Nadu)

இந்த முதற்கட்டப் பணிகள் தொடக்க தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முழு கட்டுமானத்தையும் பிப்ரவரி 2027க்குள், அதாவது 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை?

இதுவரை, ஒட்டுமொத்த கட்டுமானத்தில் 14.5 விழுக்காடு முன்னேற்றம் அடைந்துள்ளது. நீடித்த நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் பொறுப்பு, எரிசக்தி செயல்திறனை வலியுறுத்தி, ஐ.ஜி.பி.சி கோல்டு (IGBC Gold) மதிப்பீட்டை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம். மதுரை எய்ம்ஸ் வளாகம் நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் வசதிகள்

மதுரை எய்ம்ஸ் மருததுவமனையில் திட்டமிடப்பட்டுள்ள 900 படுக்கைகளில் 150 படுக்கைகள் பிரத்யேகமாக தொற்று நோய்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவை அடங்கியுள்ளன.

இதையும் படிங்க:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி நீட் சான்றிதழ் அளித்து சேர முயன்ற ஹிமாச்சல் மாணவர் கைது!

இது மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் ஒரு முழுமையான தன்னிறைவை உறுதி செய்யும். வளர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணிச்சேர்க்கையும் படிப்படியாக நடந்து வருகிறது. மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை நிர்வாகம் ஆசிரியர் பற்றாக்குறையின்மையையும், உயர் கல்வித் தரத்தையும் உறுதி செய்யும்.

அடுத்த ஆண்டுக்குள் நிரந்தர மருத்துவமனை வளாகம்:

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி ராமநாதபுரத்திலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அதன் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை எய்ம்ஸ் சுகாதார மையம் மட்டுமல்ல, இது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு, மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வி வழங்க உறுதிக் கொண்டுள்ள மையமாகும். எனவே, நீடித்த நிலையான முன்னேற்றம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை மக்களுக்கு வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் இயங்க திட்டமிடப்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details