மயிலாடுதுறை: தரங்கம்பாடி, பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில், மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மதுரை ஆதீனம் கூறியதாவது, “முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு எனக்கு அழைத்தவர் தினாமுனா கட்சியைச் சேர்ந்தவர். தினாமுனா கட்சியில் இருந்தால் கரை வேட்டிதான் கட்டவேண்டும். இதுவரை இருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர்கள் எல்லாம் கரை வேட்டி கட்டி தான் பார்த்திருப்போம்.
ஆனால், அவர் எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார். கரை வேட்டி கட்டிய அமைச்சர் சேகர்பாபுவை காவி வேட்டி கட்ட வைத்தது முத்தமிழ் முருகன் மாநாடு. தருமை ஆதீனத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர். மகாவித்துவான் தண்டபானி தேசிகர்தான் கருணாநிதியின் ஆசான். அவர் வந்த உடனே கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார். அவர்தான் கருணாநிதியை உருவாக்கினார்.
தருமை ஆதீனம் ஒரு சம்பிரதாயம் கருதிதான் பல்லக்கில் ஏறுகிறார். எங்கள் ஆதீனம் நடக்கவும் செய்வார். பல்லக்கு ஒரு பொறுட்டல்ல, அதை அமைச்சர் புரிந்து கொள்வார். இந்த கோயிலுக்கு குத்தகைதாரர்கள் அதிகம் உள்ளனர். கோயில் குத்தகையை கேட்டால் குத்துவதற்கு கைதான் வருகிறது. கோயில் குத்தகை வழங்காதவர்களிடம் வசூல் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.