சென்னை: 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2022-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த 1,68,491 பேரில் 42,878 பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பருவத்தில் சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பயிற்றுவிப்பதன் மூலம், நீண்டகாலத்துக்கு இப்பழக்கம் மனதில் நிற்பதுடன், சாலைப் பாதுகாப்பை அவர்களின் வாழ்க்கை முறையின் இயல்பான பகுதியாக உட்புகுத்தவும் உதவுகிறது.
அதுமட்டுமின்றி, சாலைகளில் உயிர்களைக் காப்பாற்ற உதவும் இயல்பான மனப்பாங்குக்கு மாறுவதை இந்தச் சமூகம் உறுதிசெய்ய முடியும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், நடைமுறைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதுடன், சாலைகளில் வாகனங்களை மிகுந்த பொறுப்புடன் ஓட்டுவதை இத்திட்டம் வலியுறுத்துகிறது.
சென்னை ஐஐடியின் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையமும் போர்டு நிறுவனமும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக்கொண்டன. இதற்கெனப் பயிற்சி பெற்ற நபர்கள், அந்தந்தப் பள்ளிகளிலும், போக்குவரத்து வரம்புக்கு உட்பட்ட இடங்களிலும் ஓட்டுநர் நடைமுறைகள், போக்குவரத்து விதிகள், ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இளம் ஓட்டுநர்கள் படிக்கும் காலத்திலேயே இதனை செயல்படுத்துவதன் மூலம் விபத்துகளைக் குறைத்து, சாலைப் பயனாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, "சென்னை ஐஐடி பல்வேறு முயற்சிகள் மூலமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளது. சாலைகளில் பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் இளைய தலைமுறையினரை இந்த முயற்சிகளில் ஈடுபடுத்துவது முக்கியமானது. இதற்கு முன்பு ஓட்டுநர்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் விதமாக நாங்கள் பணியாற்றி வந்திருக்கிறோம் இதன் மூலம் இளைய தலைமுறையினருக்கும் நாளைய ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுநருக்கான நடைமுறைகளை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.
மனித நடத்தையை அடிப்படையாகக் கொண்டு அதன் அடிப்படையில் ஆசிரியர்கள், போக்குவரத்துக் காவலர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் போன்றவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.