சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று (ஜூலை 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது எனக் கூறி, அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர் டி.ஜி.பி. ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், சிபிஐ விசாரணை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.