தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது"- சென்னை உயர் நீதிமன்றம்! - RTD teachers BENEFITS

RTD BENEFITS: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1995ஆம் ஆண்டுக்குப் பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 10:54 PM IST

சென்னை: கடந்த 1988ஆம் ஆண்டுக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக் கோரி 1995ம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்ற வில்லை எனக் கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது.

இதை எதிர்த்து 1995ம் ஆண்டு டிசம்பருக்குப் பின் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று, தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 1988ம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் அரசாணை 1995 ம் ஆண்டுக்குப் பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்பதால், தங்களுக்கு இந்த பலன்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், 1988 முதல் 1995 வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் எனவும், இந்த கால வரம்பு இல்லாமல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கினால் அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பு வாதங்களை ஏற்றக் கொண்ட நீதிபதிகள், 1995 ம் ஆண்டு டிசம்பருக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த கால வரம்புக்குப் பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்கள் பெற உரிமையில்லை. அதனால் 1995ம் ஆண்டுக்கு பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தாய், தம்பியை கொன்றுவிட்டு படம் பார்த்த மகன்.. சென்னை இரட்டைக்கொலை வழக்கில் திடுக்கிடும் பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details