தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணுக்கு எதிரான வழக்கு; நீதிமன்றம் முக்கிய கருத்து! - TNPSC Group 4 Tamil Paper - TNPSC GROUP 4 TAMIL PAPER

TNPSC: அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC
டிஎன்பிஎஸ்சி அலுவலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 10:08 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் 2021ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசுப் பணிக்கு நடக்கும் தேர்வில், தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் உள்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் மொழித்தாள், பொது அறிவு, திறனறிவு தேர்வுத் தாள்கள் என இரு பகுதிகளாக தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆங்கில வழியில் படித்த விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர் எனவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏற்கனவே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நூறு சதவீதம் வழங்குவதைப் போலாகிவிடும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே சில தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டதாகவும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற அரசு தலைமை வழக்கறிஞரின் சரியானது தான்.

தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர, நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு: வெளியான முக்கிய அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details