சென்னை:கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011 ஆம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனு தொடர்பாக சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க:160 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட உலகின் 2வது பெரிய நீதிமன்றம்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாறு அறிவோம்