தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கனியாமூர் பள்ளி மாணவியின் தாயாரை ஏன் விசாரிக்கவில்லை?” - உயர் நீதிமன்றம் கேள்வி! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 8:45 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2022 ஜூலை 17ஆம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை வேறு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கலவரம் தொடர்பாக 519 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 166 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கூட்டம் கூட்டிய திராவிட மணி என்பவரையும், உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியையும் காவல் துறையினர் இதுவரை விசாரிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை? நல்ல நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒருவேளை இருவருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் வழக்கில் சேர்ப்பீர்களா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு காவல்துறை தரப்பில், செல்போன் ஆய்வக முடிவுக்காக காத்திருப்பதாகவும், விசாரணை நான்கு மாதங்களில் முடிக்கப்படும். மேலும், ஆதாரம் இருந்தால் இருவரும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் தாயார் வேட்பு மனு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details