தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவன மோசடி; காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - Chennai Financial Fraud - CHENNAI FINANCIAL FRAUD

Aarudhra scam: பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை  உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:21 PM IST

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்என்எஸ் உட்பட பல நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் முதலீடுகளைப் பெற்று, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்களின் நிர்வாகிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதால், இந்த வழக்குகளின் விசாரணையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை காவல் துறையினர் இதுவரை கைது செய்யவில்லை என்றும், மோசடி செய்து திரட்டப்பட்ட தொகை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை அமலாக்கப்பிரிவு, சிபிஐ போன்ற அமைப்புகளே விசாரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், நிதி மோசடி தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஹிஜாவு, ஆருத்ரா மோசடி வழக்குகளில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, இந்த நிதி நிறுவன மோசடி வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் பல கோடி மதிப்பிலான சொத்து 17 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக போலீசில் புகார்

ABOUT THE AUTHOR

...view details