சென்னை:பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலாஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்தலாஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “எந்த உள்நோக்கமும் இல்லாமல் வேறு இரு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. பெங்களூருவில் இதுசம்பந்தமாக பதியப்பட்ட வழக்குக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனது கருத்துக்கு எக்ஸ் தளத்தில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது.