சென்னை: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோயில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. மேலும், காணொலிக் காட்சி மூலம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆஜராகியிருந்தனர்.
அப்போது, "நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோயிலைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்" என அச்சம் தெரிவித்தனர். மேலும், அரசுத் தலைமை வழக்கறிஞர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
அதேபோல், “பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோயிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
கோயிலில் பூஜைகள் செய்ய அர்ச்சகர் ஒருவரை நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், “பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோயில் திறக்கப்படும்போது எந்த சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
மேலும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால், அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தார். மேலும், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அப்போது கோயிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்து, விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தகுதியில்லாத செவிலியர்களைப் பணி நியமனம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு; தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு