தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே, அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 10:39 PM IST

சென்னை: மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய்களான பிட்புல், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டஃபோர்டு டெரியர், ராட் வீலர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல் டாக்,போர் போல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காக்கேஷியன் ஷெபர்டு, தெற்காசிய ஷெஃபெர்ட், உல்ஃப் டாக்ஸ் உள்ளிட்ட நாய்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

இந்த உத்தரவுக்கு பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில், நாய்களை வகைப்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை மத்திய கால்நடைத் துறை கோரியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய கென்னல் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், சமீபத்தில் சிறுமியைக் கடித்ததாக ரேட் வீலர், பாக்ஸர் நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பாக்ஸர் நாய் விளையாட்டுத்தனமான நாய் வகை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, லேப்ரேடர் நாயும் குழந்தையை கடித்ததாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டி, அதற்காக லேப்ரேடர் நாயை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என கூற முடியாது எனவும், அறிவியல்பூர்வமான ஆய்வுக்குப் பிறகு முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தடை செய்யப்பட வேண்டிய நாய்களை வகைப்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:சிறுத்தை நடமாட்டம்; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - Leopard in Tirupathur

ABOUT THE AUTHOR

...view details