சென்னை:விழுப்புரத்தில், காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்ததாக கூறப்படும் ராஜா என்பவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம், பெரிய காலனியில் வசித்து வந்தவர் ராஜா. கார்த்திக் என்பவரின் கேன்டீனில் பணியாற்றி வந்த ராஜா, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு விழுப்புரம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் லத்தியால் அடித்ததிலும், பூட்ஸ் காலல் தாக்கியதிலும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பின், அவரை காவல் நிலைய சொந்த பிணையில் போலீசார் விடுவித்தனர். காயமடைந்திருந்த ராஜா, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மீண்டும் உடல் நலம் மோசமானதால், விழுப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது உடல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து, மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என ராஜாவின் மனைவி, அஞ்சு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அவசர அவசரமாக தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததுடன், அதை தகனம் செய்யும்படி போலீசார் நிர்பந்தித்ததாகவும், தங்கள் குடும்ப வழக்கப்படி உடலை அடக்கம் செய்த நிலையில், உடலை தோண்டி எடுத்து தகனம் செய்யும்படி காவல்துறையினர் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.