சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் துணை தாசில்தார்களுக்கு தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த துணை தாசில்தார் எஸ்.சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த துணை தாசில்தார் வேலு உள்பட துணை தாசில்தார்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறையில் தாசில்தார் பதவி உயர்வு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தாததால் துணை தாசில்தார்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 27ஆம் தேதி வருவாய்த் துறை செயலாளர் வி.ராஜாராமன், ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சராயு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அதிகாரிகள் அன்று ஆஜராகவில்லை என்றால், அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்றும் வாய்மொழியாக நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு; ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு! - kallakurichi hooch tragedy