கோயம்புத்தூர்: கோவை முட்டத்துவயல் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், முற்போக்கு அமைப்பினரின் உண்மை கண்டறியும் குழு மின் தகன மேடையை ஜூன் 15ம் தேதி ஆய்வு செய்ய சென்றது.
அப்போது, ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள், முற்போக்கு அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. முற்போக்கு அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த தினேஷ் ராஜா, வெங்கடராசா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு நீதிபதி தமிழ் செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், ''உண்மைக் கண்டறியும் குழுவின் சோதனை என்ற பெயரில் தங்களது நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' எனவும் கூறினார்.