சென்னை: போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கரின் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கோவை சிறையில் அடைக்கப்படும் முன் சவுக்கு சங்கர் காயமடையவில்லை எனவும், அதன்பின் சந்தித்த வழக்கறிஞர், அவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்ததாகவும், அதற்கு முன் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், எந்தக் காயமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை மறுத்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்த போது தாராபுரம் அருகே விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். சவுக்கு சங்கரின் இடது கை, வலது கால்பாதம், உதடு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும், பின் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.