சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், விசாரணை நீதிமன்றத்துக்கு காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுநாள், விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மனு மீது மனுக்கள் தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக் கூடாது எனவும் தெரிவித்தார்.
பின்னர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, நான்கு மாத அவகாசம் கோரியிருக்கிறார். அதற்குள் வழக்கை முடிக்கும் திறமை அவருக்கு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து முடிக்க நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அதற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து! - Vijay congratulates Rahul Gandhi