சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடிக் கம்பங்களை நட்டுள்ளதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக நெடுஞ்சாலைகளில் கொடிக் கம்பங்கள் நடுவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அரசியல் மேடையாக பயன்படுத்துகின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சென்னை - தடா, கோயம்பேடு - மதுரவாயல் உள்பட மூன்று பகுதிகளில், 40 சட்டவிரோத கொடிக்கம்பங்கள் உள்ளதாகவும், மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை இடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 சட்டவிரோத கொடிக்கம்பங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 சட்டவிரோத கொடிக் கம்பங்களும் இருப்பதாக பதிலளித்துள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோத வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.