சென்னை: தேசிய புலனாய்வு முகமை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ்வர் பெருமாள் என்பவரின் மனைவி சுஜாதா, புழல் சிறையில் அதிக நெருக்கடிக்கு மத்தியில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 2 ஆயிரம் கைதிகளை மட்டும் அடைக்கக் கூடிய புழல் சிறையில் 3,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 60 கைதிகளுக்கு ஒரு கழிப்பிட வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆரோக்கிய குறைபாடு நிலவுவதாகவும், அதன் காரணமாக தனது கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரை நெரிசல் இல்லாத ஆரோக்கியமான முறையில் பராமரிக்கப்படும் வேறு சிறைக்கு மாற்றக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதையும் படிங்க:ஆயுள் தண்டனைக் கைதிக்கு கொடுமை? வேலூர் மத்திய சிறை டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் வரிசையாக சஸ்பெண்ட்!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, சிறைகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. தொடர்ந்து, 60 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை மட்டுமே வழங்குவது எப்படி முறையாக இருக்கும் எனவும், வண்டலூரில் கூட விலங்குகளுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், வழக்கு தாக்கல் செய்ய எந்த அனுமதியும் வழங்கவில்லை என கைதிகள் தவறாக தெரிவிக்கின்றனர் எனக் கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த கைதிகளை சிறை அதிகாரிகள் என்ன செய்வார்கள் எனத் தெரியும் எனக் குறிப்பிட்டனர்.
இது போல வழக்கு தாக்கல் செய்யும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சிறையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த கருத்துருக்களையும் தாக்கல் செய்யக் கூறி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.