தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இதற்கு தானே சுதந்திரம் பெற்றோம்'.. மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி! - Savukku shankar case - SAVUKKU SHANKAR CASE

madras high court about social media: சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என சவுக்கு சங்கர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கர், உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சவுக்கு சங்கர், உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 3:01 PM IST

சென்னை:'சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் தான் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது' என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வுக்கு விசாரணை வந்தது.

அப்போது நீதிபதிகள், ''கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிராக மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டம் தொடர்பாக மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாமதமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது''.

''பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அது குறித்த காரணங்கள் உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை. சவுக்கு சங்கருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையானதாக தெரியவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது'' எனவும் கூறி அந்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.

மேலும், ''தனிநபர்கள் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை குண்டர் சட்டத்தை பயன்படுத்தி கடிவாளம் போடுவதால் எந்த முடிவும் ஏற்படாது. இந்த இணையதள யுகத்தில், பல தளங்களில் இருந்து தகவல்கள் குவிகின்றன. ஒவ்வொரு கருத்துக்களுக்கும் எதிராக அரசு இயந்திரம் நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை. குடிமக்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்களை பெறாவிட்டால் அது ஜனநாயகமாக இருக்காது'' என்றனர்.

அத்துடன் ''சமூக ஊடக பதிவுகளுக்கும், யூடியூப் பதிவுகளுக்கும் பின்னால் அரசு செல்வதால், யாருடைய கருத்தும் மாறப் போவதில்லை. மாறாக பேச்சு சுதந்திரத்தை முடக்குவதாகவே கருதுவதுடன், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும். ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவிக்கும் சிறிய குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், அனைவரின் குரலையும் ஒடுக்கி விட முடியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது தான் எனத் தெரிவித்தனர்.

மேலும், பிற ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், சமூக ஊடகங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என அறிவுறுத்திய நீதிபதிகள், சாதாரண மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்களை அரசு கருத வேண்டுமே தவிர, அந்த ஊடகங்களை முடக்க முயற்சிக்கக் கூடாது. அரசு நிர்வாகம் குறித்த கருத்துகளை முடக்கியதால் தான் சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் விழித்துக் கொண்டு சுதந்திரம் பெற்றோம். இப்போது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details