சென்னை:18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் எழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "வேலை காரணமாக வாக்குரிமையை யாரும் இழந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இந்த விடுமுறையைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் வாக்களித்தார்களா? என சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையைப் பெற, வாக்களித்ததற்கான சான்றைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார்.