தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கு; அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

Amar Prasad Reddy Bail Case: பெண் நிர்வாகியை தாக்கியதாகப் பதிவான வழக்கில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Amar Prasad Reddy Bail Case
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 7:34 PM IST

சென்னை: கேலோ இந்தியா போட்டிகளின் துவக்க விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, அவரை வரவேற்க ஆட்களை அழைத்து வருவதற்காக பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரில், பாஜக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது கோட்டூர்புரம் போலீசார், அத்துமீறி வீடு புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல், மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக, தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக, என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், "பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு என்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

மேலும், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்திற்கு உதவியாக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக, உள்நோக்கத்தோடு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை தரப்பில், "அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்படவில்லை. அவர் சார்ந்த கட்சியின் பெண் நிர்வாகி, தன்னை தாக்கி தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக புகார் தெரிவித்ததன் அடிப்படையிலேயே வழக்கு பதியப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிபதி கார்த்திகேயன், 10 நாட்களுக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி அமர் பிரசாத் ரெட்டி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து, முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாவிட்டால் ஜாமீன் மனுவை ரத்து செய்ய காவல்துறை மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க:எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை.. அண்ணாமலை விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details