சென்னை: தமிழகத்தின் வனப்பகுதிகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பிரதேசங்களில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தியது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து, மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, அந்த காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்ப ஒப்படைக்கும்போது, கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டமானது, வனவிலங்குகள் நிறைந்த மலைப்பகுதிகளிலும், சில மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காலி மதுபாட்டில்களை ஒப்படைத்தவர்களுக்கு ரூ.297.97 கோடி:மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும், 12 மாவட்டங்களிலிருந்து இதுவரை 306 கோடியே 32 லட்சத்து 25,330 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மது பாட்டில்களை திரும்பத் தந்தவர்களுக்கு 297 கோடியே 97 லட்சத்து 61,280 ரூபாய் திரும்பத் தரப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை திரும்பி தராமல் கூடுதலாக வசூலிக்கப்பட்ட உபரி வருவாயாக சுமார் 9 கோடியே 19 லட்சத்து 64,050 ரூபாய் தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.