சென்னை: பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கக் கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், தையூர் பங்களாவின் மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு ராஜேஷ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பீலா வெங்கடேசன் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பீலா வெங்கடேசன் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வீட்டின் மீது ராஜேஷ் தாஸ்க்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில், மீண்டும் மின் இணைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுக்க முடியாது என தெரிவித்தார்.
ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், வீட்டுக்கடனை தாம் செலுத்தி வருவதாகவும், தனது உடல் நலனையும் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ராஜேஷ் தாஸின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோவையில் குழந்தைகளை விற்ற ஹோட்டல் தம்பதி.. தீவிரமாகும் வழக்கு.. ஆந்திராவுக்கு விரையும் போலீஸ்! - coimbatore child sale case