தமிழ்நாடு

tamil nadu

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் காலநிலை ஆய்வு செய்ய வலியுறுத்திய வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! - poovulagin nanbargal

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 3:01 PM IST

EIA report case: தொழிற்திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்வதை கட்டாயமாக்க உத்தரவிட கோரிய வழக்கு குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தொழிற்திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன் காலநிலை மாற்றத் தாக்க ஆய்வை கட்டாயப்படுத்தக் கோரிய வழக்கு குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜி.சுந்தர்ராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சித் திட்டங்களை தொடங்க, சுற்றுச்சூழல் சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த 2006ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்ய வலியுறுத்தவில்லை எனவும், ஒரு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்வதைக் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, புதிய தொழில் திட்டங்களுக்கு காலநிலை மாற்ற தாக்க ஆய்வையும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நல்ல காரணத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இரு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவரின் ஓய்வூதிய பாக்கி..வங்கி கணக்கில் ரூ.15.31 லட்சம்! - நீதிமன்றம் விதித்த முக்கிய தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details