சென்னை: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் வனிதா. மாற்றுத்திறனாளியான இவர், கணவரால் கைவிடப்பட்டு பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், தனியாக இருந்த வனிதாவுக்கு, வீட்டின் அருகில் இருந்த சர்மிளா பேகம் என்ற பெண் சிறு சிறு உதவிகளைச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வனிதா தங்க நகைகள் வைத்திருப்பதை அறிந்துகொண்ட சர்மிளா பேகம், அதை எப்படியாவது திருடிவிடத் திட்டமிட்டுள்ளார். அதற்காக வனிதாவுக்கு பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கடந்த 2009ஆம் ஆண்டு திருடிச் சென்றுள்ளார் சர்மிளா பேகம். இந்த வழக்கில் கைதான சர்மிளா பேகத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சர்மிளா பேகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அப்போது, சர்மிளா பேகம் தரப்பில், கொலை செய்யும் நோக்கம் இல்லை என்றும், நகைகளைத் திருட மட்டுமே திட்டமிட்டதாகவும், தற்போது 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாக வாதிடப்பட்டது.