சென்னை:வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட இருவரும், ஜன.25ம் தேதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், பணிப்பெண்ணை வீட்டுப் பெண் போல மனுதாரர்கள் நடத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், பணிப்பெண்ணின் கல்லூரி படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்தியதாகவும், கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியதாகக் கூறி, அதற்கான புகைப்படங்களை நீதிபதியிடம் சமர்பித்தனர். மேலும், கடந்த மாதம் 15ஆம் தேதி அன்று, வேறு நபர் ஒருவர், அந்தப் பெண்ணை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் கரண்டி உள்ளிட்டைவைகளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன், பணிப்பெண்ணுக்கு மிகவும் கொடூரமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பெண் விரும்பிய படிப்பைக் கூட படிக்கவிடவில்லை எனக் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை எனவும், புகாருக்கு உள்ளான இருவரிடமும் காவல்துறை விசாரணைகூட நடத்தவில்லை என தெரிவித்தார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார். இதை அடுத்து, முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு காவல்துறை பதில் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் பிரதாப், இது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்வதாக கூறினார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இது போன்ற தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, நாளை மறுதினத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஜாமீன் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மீண்டும் தள்ளுபடி.. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறிய காரணம் என்ன?