சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, இதை எதிர்த்து என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோத போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில் குமார் முன்பு இன்று மீ்ண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, “மனுதரார் கடந்த ஆண்டும் இதே 16 கோரிக்கை வைத்து போராட்ட அறிவிப்பு வெளியிட்டனர். அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மற்றும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி, இந்த பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போதும் அதே கோரிக்கை தொடர்பாக வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு மற்றும் நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
பிரச்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், போரட்டம் நடத்துவது சட்டவிரோதம் ஆகும். கோரிக்கை தொடர்பாக முடிவு எட்டுவதற்கு முன்னர் போரட்ட அறிவிப்பு தன்னிசையானது. தற்போது சிலர் போராட்டத்தை தூண்டி வருகின்றனர். இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டாகும். எனவே, உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும், விதிகளுக்கு புறம்பாக அறிவிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.