தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?" - இளையராஜா விவகாரத்தில் நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Ilayaraja Case

Ilaiyaraja: எக்கோ மற்றும் அகி இசை நிறுவனங்கள் காப்புரிமை முடிந்த பிறகும், பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

Music Composer Ilaiyaraja
Music Composer Ilaiyaraja

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 4:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ மற்றும் அகி (A.G.I) உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனிதா சுமந்த், தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என்ற தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அமர்வில் இன்று (ஏப்.24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விட்டதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும் எனக் கூறினார். தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் தங்களுக்குச் சொந்தமாகி விட்டதாகக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பு என்பது க்ரியேட்டிவ் பணி என்பதால், காப்புரிமைச் சட்டம் பொருந்தாது எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்குப் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? எனக் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஸ்ருதிஹாசன் - லோகேஷ் நடித்த 'இனிமேல்' ஆல்பம் - 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை! - Inimel Album Song

ABOUT THE AUTHOR

...view details