தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 840 கோடி ரூபாய் இழப்பு! - சாம்சங் நிறுவனம் நீதிமன்றத்தில் தகவல் - SAMSUNG STRIKE ISSUE

தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் (ரூ.840 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படங்கள்
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 6:19 PM IST

Updated : Oct 22, 2024, 6:47 PM IST

ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்ற பெயரில் தொழிற்சங்கத்தை துவங்கி அதை பதிவு செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது என சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தங்கள் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்யவில்லை' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

'தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும்' எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டார். இதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று ( அக் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சாம்சங் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது அடிப்படை உரிமை அல்ல' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க :சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கு; நாளை மறுநாள் விசாரிப்பதாக நீதிபதி அறிவிப்பு!

மேலும், 'தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் (ரூ.840 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தை தொடங்கிக் கொள்ளலாம். எனவே, இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது தொழிலாளர்கள் சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, 'தொழிற்சங்கங்கள் சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை. கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளது. இதேபோல் பல நிறுவனங்களின் பெயர்களில் தொழிற்சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளன' என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாம்சங் நிறுவனத்தின் இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 22, 2024, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details