சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? என அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாவட்டங்கள் முழுவதும் அதிகமான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாநில அரசின் விசாரணை அமைப்பு விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. அதனால் விசாரணையை மாற்று அமைப்புக்கு மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நினைத்தால் வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முக்கிய அரசியல் கட்சியினருக்கு நேரடி தொடர்பு உள்ளது. அதனால் தான் மாற்று அமைப்புக்கு விசாரணையை மாற்ற அரசு மறுப்பு தெரிவிக்கிறது என வாதம் செய்தனர்.