தமிழ்நாடு

tamil nadu

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் தேர்வானது ஏன்? - சென்னை தின சிறப்புத் தொகுப்பு - Madras Day 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 7:57 PM IST

Updated : Aug 22, 2024, 6:11 AM IST

Royapuram Railway Station: வட சென்னையின் முக்கிய பகுதியாக உள்ள ராயபுரத்தில் இருந்து தான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. அப்படிப்பட்ட ராயபுரத்தின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

ராயபுரம் ரயில் நிலையம்
ராயபுரம் ரயில் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:மக்களின் நாகரீகம் நதிகள், ஆறுகள் இருக்கும் இடங்களில் உருவானது என வரலாறுகள் கூறுகின்றன. மக்கள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்தை நோக்கி செல்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. அப்படி தென்னிந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது 1856ஆம் ஆண்டு ராயபுரத்தில் தொடங்கப்பட்ட ரயில் சேவை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ராயபுரம் ரயில் நிலையம்:வட சென்னையின் முக்கிய பகுதி ராயபுரம் இங்கிருந்து தான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தியா முழுவதும் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அந்த வகையில் இந்தியாவின் இரண்டாவது ரயில் நிலையம் அமைப்பதற்காக ராயபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் ராயபுரம் இருந்ததால் தேர்வு செய்யப்பட்டது.

அதன் பின் விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்புடன் பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. 1856ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ராயபுரத்தில் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையத்தை அன்றைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார்.

ராயபுரம் (Credit - ETV Bharat Tamil Nadu)

தென்னிந்தியாவின் முதல் ரயில்: பின்னர் ஜூலை 1ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் ராயபுரத்தில் இருந்து மிகவும் ஆரவாரத்துடன் புறப்பட்டு வாலாஜாபேட்டை(ஆற்காடு) வரை சென்றது. ரயில் பெட்டிகளை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்து கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டது. இந்தியாவின் மிக நீளமான முதல் ரயில் பயணமாக அமைந்தது.

இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது. முதல் ரயிலில் ஆங்கிலேய அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய நபர்கள் சென்றுள்ளனர். இரண்டாவது இயக்கப்பட்ட ரயிலில் உள்ளூர் வணிகர்கள் சென்றுள்ளதாக வரலாறு குறிப்புகள் உள்ளன.

ராயபுரம் ரயில்வே பணிமனை (Credit - ETV Bharat Tamil Nadu)

ராயபுரத்திற்கு போட்டி:1922 ஆம் ஆண்டு வரை சென்னை ராஜதானியின் தலைமையகமாக இருந்த ராயபுரம் ரயில் நிலையம் பின்னாளில் எழும்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின் சென்ட்ரலுக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்புவரை மெட்ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலையமாக ராயபுரம் ரயில் நிலையம் கோலோச்சி இருந்தது. 1873இல் மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இதுவே பிரம்மாண்ட ராயபுரம் ரயில் நிலையத்திற்கு போட்டியாக அமைந்தது.

பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என பிரிக்கப்பட்டது.

ராயபுரம் ரயில் நிலையம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் சு.ராசவேலு ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "பண்டக சாலை அமைக்கும் பொருட்டு இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள், சென்னை துறைமுக பகுதியில் இருந்த ராஜஸ்தானி பட்டினத்தை சந்திரகிரி அரசரிடமிருந்து வாங்கி, அப்பகுதியில் ஒரு கோட்டையை கட்டி, கோட்டையின் அருகே பண்டகசாலையை அமைத்தனர்.

சென்னை துறைமுகம் (Credit - ETV Bharat Tamil Nadu)

அந்த பண்டகசாலை அமைப்பதற்காகவும், சிறந்த இடமாக ராயபுரம் விளங்கியது. பண்டைய காலத்தில் ராயபுரத்தை மாதரசன் பட்டினம் என அழைத்தனர். மாதரசன் பட்டனத்தில் மக்கள் உருவாக்கிய துறைமுகம் மிகப்பெரிய மீன்படி துறைமுகமாக விளங்கியது. சங்ககாலத்தில் இருந்தே மாதரசன் பட்டினம் என ஒன்று இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

மாதரசன் பட்டினம் என்பது பின்னாளில் மதராசபட்டினம் மற்றும் மதராஸ் ஆக மாறியது. மதராஸ் என்பது தமிழ் சொல் இல்லை என்பதால் அது நாளடைவில் அரசுகளால் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐரோப்பாவில் ரயில் இருப்பு பாலம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காலங்களில் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காகவும், இறக்குமதி செய்வதற்காகவும், இருப்பு பாதைகள் அமைக்க வேண்டும் என திட்டம் கொண்டுவரப்பட்டு, தென்னிந்தியாவில் ராயபுரத்தில் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு, அது ராயபுரம் முதல் வாலாஜாபேட்டை வரை இந்த இருப்புப்பாதை போடப்பட்டது.

ராயபுரம் ரயில் நிலையம் (Credit - ETV Bharat Tamil Nadu)

வரலாற்று சிறப்பு வாய்ந்த ரயில் நிலையம்: ராயபுரத்திலிருந்து இரண்டு ரயில்கள் புறப்பட செல்ல திட்டமிட்டு இருந்தது. முதல் ரயில் அன்றைய சென்னை ஆளுநர் ஹாரிஸ் பிரபு மற்றும் அவரின் ராணுவப்படை வீரர்கள் முதல் ரயிலில் ராயபுரத்தில் ஏறி வாலாஜாபேட்டையின் அம்மூர் வரை பயணம் செய்தார்கள். அதே நாளில் இரண்டாவது ரயில் புறப்படுகிறது. அந்த ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை சென்றுள்ளது. அதில் உள்ளூர் வணிகர்கள் சென்றிருக்கின்றனர்.

வரலாறு சிறப்பு வாய்ந்த ராயபுரம் ரயில் நிலையம் இந்தோ சரசானிக் கட்டிட கலையில் கட்டப்பட்ட மிக பிரம்மாண்ட கட்டிடமாகும். இரண்டு லட்சத்து 40 ஆயிரம் சதுர பரப்புடைய கட்டிடமாக இருந்தது. ராணுவ தளவாடங்கள், கப்பல் போக்குவரத்துக்கும் அந்த பகுதி மிகவும் ஏற்றதாக இருந்தது. 1922 வரை சென்னை ராஜதானியின் தலைமை இடமாக ராயபுரம் ரயில் நிலையம் இருந்தது. அது பின்னாளில் எழும்பூருக்கு மாற்றப்பட்டது. ராயபுரம் ரயில் நிலையத்தில் 17 ரயில் இருப்பு பாதைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பழமையான கட்டடக்கலை: தற்போது அந்த வழித்தடத்தை சரக்கு ரயில்கள் பயன்படுத்தி வருகின்றன. அவை கப்பலில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களை ஏற்றி செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. ராயபுரம் ரயில் நிலையம் உள்ளூர் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் கட்டி முடித்த பிறகு ராயபுரம் ரயில் நிலையத்தில் பயன்பாடு மிகவும் குறைந்து போனதால் ராயபுரத்தில் இன்று 40 எலக்ட்ரிக் ரயில்களும் 7 எக்ஸ்பிரஸ் ரயில்களும் செல்லும் அளவிற்கு சுருக்கப்பட்டது.

கலைநயன்மிக்க முறையில் கட்டப்பட்ட ராயபுரம் ரயில் நிலையத்தில், நாளடைவில் ரயில்கள் போக்குவரத்து குறைந்ததால் பராமரிப்பும் குறைந்தது. தற்போது இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ராயபுரம் ரயில் நிலையம் பழமையான கட்டடக்கலை அமைப்பும் நூறாண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய அமரும் மேஜைகளும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நெரிசல்களை குறைப்பதற்கு ராயபுரம் ரயில் நிலையத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளலாம். ராயபுரம் சுற்றிருக்கக்கூடிய பொது மக்களுடைய பொருளாதார நிலைமை இதனால் சீரடையும். தொன்மை காலத்திலிருந்து இந்த பகுதி ஒரு வணிகம் நடந்த பகுதியாக இருந்துள்ளது. சீனர்கள் வங்காளவிரிகுடா வழியாக வணிகம் செய்வதற்காக இந்த பகுதிக்கு வந்துள்ளனர்.

மக்கள் உருவாக்கிய அந்த துறைமுகத்தை கைப்பற்ற விஜயநகர பேரரசு பலமுறை முயற்சி செய்துள்ளதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொன்மை காலம் முதலே இப்பகுதி வாணிபம் நிறைந்த பகுதியாக இருந்ததால், ரயில்வே துறை ராயபுரம் ரயில்வே நிலையத்தை மீண்டும் புதுப்பித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் பயணிகளின் ரயில் நிலையமாக மாற்றினால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்" என தெரிவித்தார்.

ராயபுரம் ரயில் நிலையத்தின் தற்போதைய நிலை: தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை தாங்கி நிற்கும் ராயபுரம் ரயில் நிலையம் தற்போது சரக்கு ரயில் மற்றும் உள்ளூர் ரயில் நிலையமாக பரிதாபமாக காட்சியளிக்கிறது. பாரம்பரிய மிக்க ராயபுரம் ரயில் நிலையத்தை அரசு பராமரித்து புராதன சின்னமாக பதுகாக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை.. டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக இருப்பது எப்படி? - History of Mettur Dam

Last Updated : Aug 22, 2024, 6:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details