தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய குற்றவியல் சட்டங்கள்; ஜூலை 8-இல் நீதிமன்றம் புறக்கணிப்பு.. சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு! - New criminal laws protest

India's new criminal laws: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வரும் ஜூலை 8ஆம் தேதி சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 3:49 PM IST

சென்னை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வழக்கறிஞர்கள் எதிர்த்து வரும் நிலையில், இன்று (ஜூலை 5) சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அதில், மூன்று சட்டங்களையும் உடனடியாக அமல்படுத்தக்கூடாது எனவும், அமல்படுத்தப்பட்ட சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் விவாதித்தனர்.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற திங்கட்கிழமை (ஜூலை 8) ஒரு நாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனவும், இந்த சட்டம் தொடருமானால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கூறியதாவது, ''மத்திய அரசு மூன்று புதிய சட்டங்களை ஜூலை 1 முதல் அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களை மாற்றி மூன்று புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசு இதுவரை யாருக்கும் சொல்லவில்லை.

யாருடைய கருத்தையும் கேட்காமல், வழக்கறிஞர் சங்கத்தின் கருத்தை கேட்காமல் இந்த புதிய சட்டங்கள் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பெயர்களும் இன்றைய தினம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அவசியத்தையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சொல்லவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித அவகாசமும் கொடுக்காமல் விவாதத்திற்கு உட்படுத்தாமல் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

பழைய சட்டத்திற்கும், இந்த சட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற பிணையை செலுத்த முடியாமல் குற்றவாளிகள் பலர் ஜெயிலில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது வரை நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்குகளை முடிக்காமல் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான என்ன அவசியம் உள்ளன? இந்த சட்டத்தால் வழக்கறிஞர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த போராட்டம் பொதுமக்களுக்கான போராட்டம், பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற வேண்டும், அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் நிவாரணம்? - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details