சென்னை: கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் வழிப்பறி செய்ததுடன், தடுக்க வந்த பொதுமக்களை கற்களைக் கொண்டு தாக்கி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, 22 வயதான சரவணன் என்பவரை அரும்பாக்கம் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை 'குரங்கு சரவணன்' என முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் குறிப்பிட்டதற்கு அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், ஒருவரின் பெயரை மாற்றுவது, அவர்களின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, காவல் துறையினர், மரியாதைக் குறைவான பெயர்கள் வைக்கக்கூடாது என கூறி, வழக்கு ஆவணங்களில் இருந்த 'குரங்கு' என்ற வார்த்தையை நீக்கிட உத்தரவிட்டார்.
இதுமட்டுமல்லாது, பெயர் என்பது நம் அடையாளத்தின் முக்கிய பகுதி என்றும், தனிப்பட்ட கலாச்சாரம், குடும்பம், வரலாற்றுத் தொடர்புகளை ஆழமாக எடுத்துச் செல்பவை பெயர்கள் என்றும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற புனைப்பெயர்களை வைப்பது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனித உரிமையையும், அவர் நிரபராதி என கருதப்படுவதற்கான உரிமையையும் மீறும் வகையில் உள்ளது.