புதுக்கோட்டை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மத்தியக்குழு கூட்டம் இன்று (ஜூலை 14) புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இடையே சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்வே, தலைவர் பி.கே.ஸ்ரீமதி, துணைத் தலைவர் உ.வாசுகி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
துணைத் தலைவர் உ.வாசுகி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது அவர்கள் கூறியதாவது, "பெண்களின் சமத்துவம், கண்ணியமான வாழ்வுக்கு ஜனநாயக மாதர் சங்கம் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி வருகிறது. வறுமை, வேலையின்மை காரணமாக பெண்கள் துயரமான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ள பெண்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நாடு முழுவதும் 10 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்த உள்ளோம். இதை தடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைக்க வேண்டும். கடன் கொடுக்கும் நுன்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். பெண்கள் இதிலிருந்து மீள்வதற்கு மலிவான வட்டியில் கடன் கொடுப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மருத்துவத் துறையில் நடைபெறும் நீட் தேர்வு உள்ளிட்ட முறைகேடுகளைக் கண்டித்தும், அரசின் கையில் மட்டுமே மருத்துவத்துறை இருக்க வேண்டுமென வலியுறுத்தியும் வரும் ஜூலை 23ஆம் தேதி ‘அனைவருக்கும் ஆரோக்கியம் பெறும் உரிமை’ என்ற கோரிக்கைளை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தவுள்ளோம்.
பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், வறுமையே வெளியேறு, வேலையின்மையே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் ஆகஸ்ட் 6, 9, 15 தேதிகளில் மாதர் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்தவுள்ளோம்.
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் தேவையில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தனிச்சட்டம் தேவை என்பதே எங்கள் சங்கத்தின் கருத்து. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் ஒரு தூதுக் குழுவாகச் சென்று முதலமைச்சரைச் சந்திக்க உள்ளோம். சமத்துவமின்மை, சாதியப் பாகுபாடுகளை களைவதற்கென்று தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சமூக சீர்திருத்தத் துறை இருந்தது. அந்தத் துறையை மீண்டும் தொடங்க வேண்டும்" என்றார்.
தலைவர் பி.கே.ஸ்ரீமதி கூறும்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலே பாபா ஆசிரமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மூட நம்பிக்கைக்கு எதிராக தனிச் சட்டம் தேவை என்பதையே இது உணர்த்துகிறது. மேலும், மூட நம்பிக்கைக்கு எதிராகவும், சமத்துவத்தை ஆதரித்தும், சிறுபான்மையினர் வெறுப்பு, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் தேவை. மத்திய அரசின் மனு ஸ்மிருதி கொள்கையினால் இஸ்லாமிய, தலித் பெண்கள் கடுமையான வன்முறைக்குள்ளாகி வருகின்றனர்” என்றார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துணைத் தலைவர் உ.வாசுகி, "கள்ளச்சாராயத்தை உறுதியாக மாதர் சங்கம் எதிர்த்து போராடி வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். திறந்திருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும். கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு அருகில் உள்ள கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
ஒரு இடத்தில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுபானக் கூடங்களை திறப்பதையும், மாதர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. கள்ளச்சாராயத்தில் இறந்து போனவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
போதைக்கு ஆண், பெண் வித்தியாசம் கிடையாது. முறையாக கல்வி, வேலையின்மை போன்ற காரணங்கள் போதைப் பழக்கத்தை நோக்கித் தள்ளுகிறது. 18 வயதுக்குட்பட்ட வயதினர் போதைப் பழக்கத்திற்கும், சாதி, மத பற்றுதலுக்கும் அடிமையாகி வருவது வேதனைக்குரியது. இதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:"கோயில்கள் மீது அதிக வரி விதிப்பது கொலையை விட கொடூரமானது" - பொன் மாணிக்கவேல் கருத்து! - Ponn Manickavel