சென்னை: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவெடுத்ததால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (டிச.02) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், "ஃபெஞ்சல் புயல், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தவிர்த்து, இந்த பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.