மயிலாடுதுறை: மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (24). இவர் பூம்புகார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம், புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிந்துஜா (22). மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியது தொடர்பாக இருவரிடையே பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே 9ஆம் தேதி ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.
அப்போது, ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருவரும் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை பாலக்கரை விஜித்ராயர் அக்ரஹாரம் சாலை என்ற இடத்தில் சென்ற போது, தன்னை காதலிக்க மறுத்ததால் மனம் உடைந்த சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும், காதலன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.
அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்துள்ளது. பின்னர், பலத்த தீக்காயங்களுடன் கீழே விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் ஆகாஷ் 60 சதவிகிதமும், சிந்துஜா 40 சதவிகிதமும் தீக்காயம் அடைந்தனர்.
இந்நிலையில், இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றதை அடுத்து, ஆகாஷ் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு கடந்த 5 நாட்களாக இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவன் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி இன்று (மே 14) காலை உயிரிழந்தார். மேலும், காயமடைந்த மாணவியும் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். ஆகாஷ் அளித்த தகவலின் பேரில், சிந்துஜா மீது மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது காதலன் ஆகாஷ் இறந்ததை அடுத்து, கொலை வழக்காக அதனை மாற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:'' பெற்ற மகனுக்கு ரூ.2000 கொடுக்கல, 1 கோடிக்கு வீடு''? சவுக்கு சங்கரின் மனைவி பகீர்.. பரபரக்கும் பதிவுகள்! - Savukku Shankar Wife