திருநெல்வேலி:தெற்கு வள்ளியூர் ரயியில்வே கேட் அருகில் குவாரி லாரி மோதியதில் மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் ஒயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் வேறு பாதை வழியாக அனுப்பப்பட்டுள்ளன.
திருநெல்வேலி ராதாபுரம் மற்றும் கூடங்குளம் பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளிலிருந்து ஏராளமான லாரிகள் தெற்கு வள்ளியூர் வழியாக, கன்னியாகுமரி மற்றும் கேரளா பகுதிகளுக்கு செல்கின்றது. இந்த தெற்கு வள்ளியூர் வழித்தடத்தில், இரட்டை ரயில் பாதை செல்கிறது.
இந்த நிலையில் இன்று (நவ.29) வெள்ளிக்கிழமை காலை, ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் திறக்கப்பட்டதும், குவாரிக்கு கல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ரயில்வே கேட்டை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. இதில், எதிர்பாராத விதமாக ரயில்வே கேட்டில் லாரி இடித்துள்ளது. இதனால், தண்டவாளத்தின் மீது செல்லும் 25 ஆயிரம் வோல்ட் (volt) மின்சார ஒயர் மீது ரயில்வே கேட் மோதி, அதிக மின்னழுத்தம் கொண்ட ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது.