தேனி:தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்கள் இல்லாத ஐந்து வீடுகளில் பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. அதேபோல் 2024 ஆம் ஆண்டும் நான்கு வீடுகளில் சுமார் 88 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை திருடப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா, கைரேகை போன்ற எதுவும் சிக்காததால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
கொள்ளையர்களை நெருங்கிய தனிப்படை
அப்போது மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சேர்ந்த மூர்த்தி (20) மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சராஜன் (31) ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் ஏற்கனவே கோயம்புத்தூர் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்திருந்த நிலையில், தேனியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி மற்றும் அம்சராஜனை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அவர்களை காவலில் எடுத்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை விசாரித்தனர்.
இருவரையும் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின... அதாவது, மூர்த்தி, அம்சராஜன் மற்றும் இவர்களது நண்பர்களான சுரேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோருடன் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் இல்லாத வீடுகளில் புகுந்தும், ஆட்கள் உள்ள வீடுகளில் அவர்களை கட்டி வைத்தும் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மூர்த்தி தனது மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரிடம் கொடுத்து வைத்துள்ளார். மேலும், திருடிய பணத்தில் ராஜபாளையத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு விலைக்கு வந்த பழைய நூற்பாலையை விலைக்கு வாங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், மூர்த்தி மற்றும் அவரது மனைவி திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன், திருட்டு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தனது மனைவி அனிதா பிரியாவை வழக்கறிஞராகவும் படிக்க வைத்துள்ளார்.