சென்னை:இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கியமான கட்சிகள் இந்த தேர்தலில் பல தொகுதிகளில் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளன.
அதிமுக டெபாசிட் இழந்த தொகுதிகள்:தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதுடன் 8 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. அதேசமயம்,அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுடன் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், பல தொகுதிகளில் அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆனால் வெற்றி பெற முடியாத நிலையில், தென்சென்னை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் , தேனி தொகுதியில் நாராயணசாமி , ராமநாதபுரம் தொகுதியில் ஜெயபெருமாள், தூத்துக்குடி தொகுதியில் சிவசாமி வேலுமணி , திருநெல்வேலி தொகுதியில் ஜான்சி ராணி , வேலூர் தொகுதியில் எஸ்.பசுபதி, கன்னியாகுமரி தொகுதியில் பசிலியன் நாசரெத் , புதுச்சேரி தொகுதியில் தமிழ்வேந்தன் ஆகியோர் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்த தொகுதிகள்:நடந்து முடிந்தநாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி ஆகிய 6 தொகுதிகளில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஆனால் எந்த தொகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இல்லாததால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.