சென்னை:தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தியதாக 160க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் விளைவாக மாற்றுப் போதைப் பொருட்களாக எடுத்துக் கொள்ளப்படும் சானிடைசர் விற்பனைக்குப் பல விதிமுறைகளைத் தமிழ்நாடு வேதிப்பொருள்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி மருந்துக்கடைகளில் விதிகளை மீறித் தனி நபர்களுக்கு அதிகளவில் சானிடைசர் விற்பனை செய்யக்கூடாது.
அவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் மருந்துக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் மருந்துக் கடைகளில் சானிடைசர் வாங்குபவர்கள் அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும். அவ்வாறு அளவுக்கு அதிகமாக சானிடைசர் விற்கப்பட்டல் பில் போட்ட பின்னர் விற்பனை செய்ய வேண்டும் எனவும் விற்பனை செய்யப்பட்டவரின் அடையாள அட்டை நகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சானிடைசர் போல் ஆல்கஹால், எத்தனால், மெத்தனால் உள்ளிட்டவை மூலப்பொருள்களாக இருக்கும் கிளீனர்கள், அறுவை சிகிச்சை ஸ்பிரிட், வேறு ஹாண்ட் வாஷ் உள்ளிட்ட பொருட்களை முறைப்படி விற்கத் தமிழகத்தின் 37 ஆயிரம் மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் நடத்திய கலந்தாய்வின் படி அறுவை சிகிச்சை ஸ்பிரிட் என்னும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளைச் சில்லறை விற்பனையாக மருத்துவரின் பரிந்துரையின் படியே வழங்க வேண்டும். மேலும் மருத்துவர்களின் கடைகள் மற்றும் மருத்துவமனையுடன் இணைந்துள்ள மருந்தங்களைத் தவிர வேறு எந்த தனிச்சியான மருந்துகங்கள் வாங்கியிருந்தால் உடனடியாக வாங்கிய மொத்த விற்பனையாளர்களிடம் திரும்ப அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை, மருந்துகள் ஆய்வாளர்கள், மருந்து விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் விதிகளை மீறித் தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர், போன்ற ஆல்கஹால், எத்தனால், மெத்தனால் கலந்திருக்கும் கிளீனர்களை விற்கும் மருந்துக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்.. உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத ஹவுஸ் ஓனர் - கருணாபுரத்தில் சோகம்!