ஐதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று (ஜூன் 27) ரிலீசானது. உலகம் முழுவதும் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மறைந்த ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவின் நினைவு போற்றும் வகையில் படத்தின் தொடக்கத்தில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சினிமா, ஊடகம், சிட்பண்ட் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்த ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவ் தனது 87 வயதில் கடந்த 8-ஆம் தேதி காலமானார். முன்னதாக சினிமா மற்றும் ஊடகத் துறையில் அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்ம் விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில், அவரது நினைவு போற்றும் விதமாக கல்கி படத்தில் அவருக்கு நினைவுஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த தெலுங்கு நடிகரும், பிரபாஸின் உறவினருமான கிருஷ்ணம் ராஜூக்கும் இந்தப் படத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. திரையில் தோன்றிய இரு பெரும் ஜாம்பவான்களின் புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ரசிகர் ஒருவர், "ஜாம்பவான்கள் என்றென்றும் வாழ்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.