தஞ்சாவூர்:'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற முதுமொழி ஒன்று உள்ளது. அதனை வெளிக்கொணரும் விதமாக படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று இல்லாமல் ஏதேனும் கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றனர் இன்றைய தலைமுறை இளைஞர்கள்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தரணி குமார் (21) என்ற கல்லூரி மாணவர் நூலை வைத்து செய்யக்கூடிய ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் (String Art Portrait) என்னும் கலையின் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார், தரணி குமார் மத்திய சட்டக் கல்லூரி சேலத்தில் பி.ஏ., எல்எல்பி இறுதியாண்டு படித்து வருகிறார்.
கல்லூரி விடுமுறை நாட்களில் ஆர்டர் பெறப்பட்ட நபர்களுக்கு ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் கலையின் மூலம் ஓவியம் செய்து அதை விற்று வருமானமும் ஈட்டி வருகிறார். இந்த வருமானத்தை தனது படிப்பு செலவுக்கும், தனது குடும்பத்தில் உள்ள சிறுசிறு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.
இதுகுறித்து ஸ்ட்ரிங் ஆர்ட் கலைஞர் தரணி குமார் கூறுகையில், "ஸ்ட்ரிங் ஆர்ட் என்பது நூலைக் கொண்டு பிளைவுட் பலகையில் 300க்கும் மேற்பட்ட சிறிய ஆணிகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிச்சுகளை குறுக்கும் நெடுக்குமாக புகைப்படத்திற்கு ஏற்ப கட்டி ஓவியம் அமைப்பதாகும்.
இவை 30×30 என்ற அளவில் உள்ள பிளைவுட் பலகையில் செய்யப்படுகிறது. நூல் இழை அறுந்துவிடாமல் மிகவும் சிக்கலான மற்றும் நுட்பமான கலை வேலைபாடுகளை கொண்டதாக இந்த ஸ்ட்ரிங் ஆர்ட் பாட்ரேட் கலை உள்ளது. அந்த வகையில், இந்த கலை வேலைபாடுகளை முழுமையாக செய்து முடிப்பதற்கு குறைந்தது 3 முதல் 4 நாட்கள் ஆகும்.