விருதுநகர்:சிவகாசியின் முதன்மையான தொழில்களில் பட்டாசு உற்பத்திக்கு அடுத்தபடியாக அச்சகங்கள் இருந்து வருகிறது. இங்குள்ள அச்சகங்களில், 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளில் மட்டும் பிரத்யேகமாக ஈடுபட்டு வருகின்றன. சிவகாசி அச்சகங்களில் வழக்கமான தினசரி காலண்டர்களுடன், பல வடிவங்களில் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
டை கட்டிங் காலண்டர், பாயில்ஸ் காலண்டர், சில்வர் கோட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், யூவி காலண்டர், கையடக்க காலண்டர் முதல் மெகா அளவிலான காலண்டர்கள் வரை அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், கடிகாரத்துடன் இணைந்த தினசரி காலண்டர், பல வடிவங்களில் சுவாமி படங்களுடன் அழகிய போட்டோ பிரேம்களுடன் கூடிய காலண்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடவுள்கள், தமிழக அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள், தமிழகத்தின் பிரபலமான இடங்கள், இந்தியாவின் முக்கிய இடங்கள், உலக நாடுகளில் பிரபலமான இடங்கள் என கண்கவரும் வகையில் அச்சிடப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்களிலான காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் புது ரகம் மற்றும் புது வடிவங்களில் காலண்டர்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஒரு காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட வடிவங்கள் மற்றும் டிசைன்களில் காலண்டர்கள் தயாராகும். இந்நிலையில், தற்போது வரும் 2025ம் ஆண்டிற்கான காலண்டர்களின் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், 'ஆடிப்பெருக்கு' நாளன்று காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புத்தாண்டிற்கான காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்படும்.
தயாராகியுள்ள காலண்டர் ஆல்பங்கள், காலண்டர்கள் ஆர்டர்கள் எடுக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆல்பங்களில் இருக்கும் மாதிரிகளை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து, அவர்கள் விரும்பும் ரக காலண்டர்களை ஆர்டர்கள் பெற்று, காலண்டர் நிறுவனத்திற்கு முகவர்கள் தருவார்கள். முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் ரக காலண்டர்களை தயார் செய்து அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடும்.
ஆடிப்பெருக்கு நாளிலிருந்தே வரும் புத்தாண்டிற்கான காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கிவிடும். ஆடிப்பெருக்கு நாளில் புத்தாண்டு காலண்டர் சீசன் தொடங்கினாலும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தான் காலண்டர் சீசன் உச்சகட்ட விறுவிறுப்பில் இருக்கும். தற்போது, முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான காலண்டர் ஆல்பங்கள் 'ஆடிப்பெருக்கு' நாளில் வெளியிடப்பட்டன.