தேனி:இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான 'பவதாரிணி' புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஜன.25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடலை அவரது சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, பவதாரிணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை எடுத்துச் செல்லப்பட்ட உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி லோயர் கேம்பிற்கு காலை 11:00 மணியளவில் கொண்டுவரப்பட்டது. இளையராஜாவின் பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக திரளாக அங்கு கூடியுள்ளதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.