புதுக்கோட்டை: தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களில் மாநகராட்சி என எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன.
இந்நிலையில், நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டம் நகராட்சியாக இருக்கும் போது நடைபெறும் கடைசி கூட்டம் எனக் கூறப்பட்டது. அதனை அடுத்து, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும், மாநகராட்சியாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில்.
தொடர்ந்து, "இன்று நடைபெறும் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். அடுத்த முறை மாநகராட்சியாக கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நாமெல்லாம் மாமன்ற உறுப்பினராக ஆகி விடுவோம்" எனக் கூறினார். மேலும், பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரையும் நடைமுறைக்கு வரவில்லை எனக் கூறி கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது, "நகராட்சியில் தொடர்ந்து நாய் தொல்லைகள் அதிக அளவில் இருந்துவருகிறது. குறிப்பாக, சொறிநாய்கள் மற்றும் வெறி நாய்களால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இரவு நேரத்தில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்களைப் பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என பேசினர்.