தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த ஏமி கார்மைக்கேல்! நாடகத்தால் கண்முன் கொண்டு வந்த மாணவிகள்! - AMY CARMICHAEL

தேவதாசி மரபால் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் அடைந்த துயரத்தை, கண் முன்னே காட்சிப்படுத்தும் வகையில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் 'தேவதாசிய சங்காரம்' நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர்.

நாடகத்தில் நடித்த  மாணவிகள்
நாடகத்தில் நடித்த மாணவிகள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 3:09 PM IST

By இரா.சிவக்குமார்

மதுரை:தேவதாசி மரபால் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் எதிர் கொண்ட துயரத்தை கண் முன்னே காட்சிப்படுத்தும் வகையிலான நாடகத்தை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் அரங்கேற்றம் செய்தனர்.தேவதாசிகளாக விடப்பட்ட சிறு வயது பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஏமி கார்மைக்கேல் (1867-1951).

அயர்லாந்து பெண்மணியான இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியரும், நடிகருமான மு.ராமசாமியால் உருவாக்கப்பட்ட இந்த நிஜ நாடகம், நேற்று (பிப்ரவரி 18) தொடங்கி நாளை (பிப்ரவரி 20) வரை‌ ஒவ்வொரு நாளும் காலை, பிற்பகல் என மொத்தம் ஆறு காட்சிகளாக அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தேவதாசி முறையும், அநீதி நிறுத்தப்பட்ட நாடகமும்:

இந்நிலையில் ஏமி கார்மைக்கேல் குறித்து மதுரை சோகோ அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வழக்கறிஞர் செல்வகோமதி கூறுகையில், "எனக்கும் அந்த டோனாவூருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என்னுடைய சிறு வயதில் வள்ளியூரில் வசித்த நான், தாயாரின் மருத்துவத் தேவைகளுக்காக ஐக்கிய சபைக்கு செல்வேன். அப்போது அங்கிருந்த சகோதரிகள் அன்போடு என்னைப் போன்ற குழந்தைகளை வாரியணைத்து பராமரிப்பார்கள். ஏமி கார்மைக்கேல் வந்த காலத்தில் தான் தேவதாசி மரபை ஒழிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடகத்தில் நடித்த மாணவிகள் (ETV Bharat Tamil Nadu)

தத்தெடுத்த ஏமி கார்மைக்கேல்:

அதனையே நம்பி வாழ்ந்த பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான போது, அவர்கள் அனைவரையும் தத்தெடுத்து, கல்வி, தொழில் கற்றுக் கொடுத்து முன்மாதிரியாக உருவாக்கிக் காட்டியவர் அந்த அம்மையார். இந்த நாடகத்தின் மூலமாக ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் போராட்டத்தை உணரும் போது என்னைப் போன்றவர்களுக்கு புத்துணர்வைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நாடகத்தை இயக்கி வழி நடத்திய மு.ராமசாமிக்கும் டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கவிதாராணிக்கும் மிகவும் நன்றி” என்றார்.

டோனாவூர் ஐக்கிய சபை தொடக்கம்:டோனாவூர் ஐக்கிய சபையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றி வரும் ஜெரேமியா ராஜநேசன் கூறுகையில், “இந்த அமைப்பு 154 ஆண்டுகளுக்கு முன்பு ஏமி கார்மைக்கேல் அம்மையாரால் நிறுவப்பட்டது. சமூகத்தில் மிக அவலநிலையில் வாழ்ந்த தேவதாசிகள், நாடகக் கம்பெனிகளால் துன்புறுத்தப்பட்ட சிறுவர்கள் மற்றும் ஆதரவற்றோர், விதவைகள் போன்றோருக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக இந்த அமைப்பு துவங்கப்பட்டது.

நாடகத்தில் நடித்த மாணவிகள் (ETV Bharat Tamil Nadu)

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”:

இறைப்பணிக்காக இந்தியாவுக்கு வந்த ஏமி கார்மைக்கேல், இங்கு நடைபெற்ற சமூக அவலங்களைக் கண்டு சமூக நீதிக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் மிகத் துணிச்சலோடு பணியாற்றத் துவங்கினார். இறைவனின் அன்பை, கருணையை தன்னுடைய தினசரி வாழ்க்கையில் பிரதிபலித்தார். தன்னைப் பற்றி பிறர் புகழ்ந்து பேசுவதை அவர் ஒருபோதும் விரும்பியவரல்ல. சமூகத்தின் பேரிலான அக்கறையின் அடிப்படையில் அனைவரும் இயங்க வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. அந்த மண்ணிலேயே இறந்து போனாலும் கூட தனது பெயரால் சிறு கல்லறை எழுவதைக் கூட விரும்பவில்லை. இயற்கையை நேசித்தார். அவரது கோட்பாடே 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பதுதான்.

பெண்கள் எதிரான அவலங்களை தட்டி கேட்க வேண்டும்:

கடந்த 124 ஆண்டுகளாக ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் சமூகப் பணியால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். தற்போது என்னோடு இருக்கின்ற அனைவரும் அந்த ஐக்கியத்தின் வாயிலாக பயன் அடைந்தவர்கள்தான். டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் இந்த நாடகத்தை மிகத் தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்கள். மாணவிகளுக்கும், பேராசிரியர் ராமசாமிக்கும் எங்களது வாழ்த்துகள்.

ஏமி கார்மைக்கேல் குறித்து பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:'தேவதாசிய சங்காரம்': வியப்பில் ஆழ்த்தும் கல்லூரி மாணவிகளின் எழுச்சி நாடகம்!

21ஆம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும்கூட பெண்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து அவலங்களுக்கு எதிராக பெண்கள் அனைவரும் ஒன்றுபட்டு துணிச்சலோடு இயங்க வேண்டும். அதே போன்று பொதுநலத்தைக் கடைப்பிடித்து செயல்பட வேண்டும். நுண்ணறிவும், தொலைநோக்குப் பார்வையும், அன்பும் மிக முக்கியம் என்ற ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் இந்த வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details